Monday 5 February 2018

மொபைல் க்ளிக்ஸ் 3 (உணவு-2)

உணவுப்பொருட்களின் ஊர்வலம் இங்கேயும் தொடர்கிறது.

கைக்குள் அடங்கிவிடும் அளவேயுள்ள அயினிப்பழத்தின் தோலை வெறும் கைகளாலேயே மெதுவாகப் பிரித்தெடுத்தால், உள்ளே ஆரஞ்சு நிறத்தில் புளியம்பழ அளவிலான சுளைகள் நடுத்தண்டுடன் ஒட்டிக்கொண்டு கொத்தாக இருப்பதைக் காண முடியும். வேனிற்காலங்களில் அதிகம் கிடைக்கும். லேசான புளிப்பும் இனிப்புமாக உண்ண மிகச்சுவையாக இருக்கும் இந்தப்பழம் சிறுவர்களுக்கும் குழந்தையுள்ளம் கொண்டவர்களுக்கும் மிக விருப்பமானது. ஆகவே, பள்ளிக்கூடங்களின் வெளியே இதை விற்றுக்கொண்டிருப்பது சகஜமான காட்சி.


எத்தனையோ விதவிதமான குளிர்பானங்கள் கடைகளில் கிடைத்தாலும் நன்னாரி சர்பத் கன்னியாகுமரி மாவட்டத்தினரின் மனதில் பிடித்திருக்கும் இடத்தை அசைக்க முடியாது. ஒரு கண்ணாடி தம்ளரில் அரை மூடி எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து விட்டு, அளவாய் நன்னாரி சிரப்பை சேர்த்து, குளிர்ந்த நீர் சேர்த்துக்கலக்கிக் குடித்தால், வயிறு, உடல் எல்லாம் குளிர்ந்து போகும். கோடை காலத்தில் சிலருக்கு நீர்க்கடுப்பு ஏற்படுவது சகஜம். அப்படியிருந்தால் நன்னாரி சர்பத்தை தொடர்ந்து குடித்து வர உடல் நலம் கிடைக்கும். நன்னாரி வேரை தண்ணீரில் கொதிக்க வைத்து, முறையாகத் தயாரிக்கப்படும் சிரப்பே உடலுக்குச் சிறப்பு. இப்போதெல்லாம் இந்த சிரப் செயற்கை மணமூட்டிகளை உபயோகித்தும் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. பூச்சிமருந்து வாடையடிக்கும் அவற்றைக் குடிப்பதை விட பச்சைத்தண்ணீரைக் குடிப்பது மேல். சில கடைகளில் இப்போதெல்லாம் நன்னாரி சிரப்புடன் தன்ணீருக்குப் பதிலாக சோடா சேர்த்துத் தர ஆரம்பித்திருக்கிறார்கள். ருசியில் மாறுதல் தேடும் நாக்கின் திருவிளையாடலன்றி வேறென்ன? 

சாக்லெட் ஊற்று இப்பொழுதெல்லாம் மால்களின் உணவுக்கூடங்களில் சகஜமாகத் தென்படும் ஒன்று. கொப்பளித்து ததும்பிப்பாயும் சாக்லெட் திரவத்தில் பிடித்தமான ஐஸ்க்ரீம், மற்றும் உணவுப்பண்டங்களை முக்கியெடுத்து விரும்பிச்சுவைக்கும் மழலைப்பட்டாளத்துக்குப் போட்டியாக இளசுகளும் மொய்க்கின்றனர். சில மால்களில் இந்த ஊற்றைப் படம் பிடிக்க அனுமதிப்பதில்லை. நம் சாமர்த்தியம் போல்தான் படம் பிடிக்க வேண்டும். :-)    

கோடைகாலம் வந்து விட்டாலே பலா மலியும். பழம் தின்று கொட்டையைத் தூக்கி எறிவதில்லை எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தார். நறுக்கி பலாக்கொட்டைத்துவரன் செய்து விடுவோம். சம்பா அரிசிக்கஞ்சிக்கு நல்லதொரு துணை. சுடச்சுட ரசம் சாதம் இருந்து விட்டாலோ,.. கொண்டாட்டம்தான்.

ஜில்ஜில் ஜிகர்தண்டாவை விரும்பாதவர்கள் இருப்பார்களா என்ன? பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் விருப்பமான இப்பண்டம் மதுரையில் பிறந்ததாகக் கூறப்படுகிறது. மதுரைக்குச் சென்று மீனாட்சியைத் தரிசிக்கிறார்களோ இல்லையோ.. ஜிகர்தண்டாவை ருசிக்காமல் வருபவர்கள் மிகக்குறைவு. உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுப்பதால் கோடைகாலத்துக்கு ஏற்ற பானம். வடநாட்டில் பிரபலமான ஃபலூடாவின் ருசியை ஒத்திருக்கும் ஜிகர்தண்டாவில் பால், ஜவ்வரிசி அல்லது சேமியா, கடல்பாசி, பாதாம் முதலிய உலர்பருப்புகள், நன்னாரி சர்பத் மற்றும் ஐஸ்க்ரீம் போன்றவை சேர்க்கப்படுகின்றன. முருகன் இட்லிக்கடைக்குச் சென்று உணவு அருந்தி விட்டு ஜிகர்தண்டா சாப்பிடாமல் வந்தால் தெய்வக்குற்றமாகி விடுமென தின்னிப்பண்டார சுவாமிகள் அடுக்களை சாஸ்திரத்தில் திருவாய் மலர்ந்திருப்பது நினைவில் கொள்ள வேண்டியது.

"அந்த அண்ணாச்சிய வெட்டி தொலிய உரி" என்று கன்னியாகுமரி மாவட்டத்தில் யாரேனும் ஒருவரோடொருவர் உரையாடக்கேட்டால் பதறாதீர்கள். அன்னாசியைத்தான் அத்தனை பாசமாக விளிப்பர் எம் மக்கள். எங்கள் மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்களுக்கு வேலியாக அன்னாசிச்செடியே பெரும்பாலும் பயிரிடப்படுவதால், சீசன் சமயங்களில் விலை மிக மிக மிக மலிவாகவும், சீசன் இல்லாத சமயங்களில் மிக மலிவாகவும் கிடைக்கும். அன்னாசித்துண்டுகளை அப்படியே சாப்பிடும்போது சில சமயம் தொண்டைக்கரகரப்பு ஏற்படும். அதைத் தவிர்க்க அதன் மேல் சர்க்கரை தூவி குலுக்கி வைத்து பத்து நிமிடம் கழித்து சாப்பிடலாம். சிலருக்கோ அதன் மேல் லேசாக உப்பு, மிளகாய்த்தூள் தூவி வாய் எரிய எரியச் சாப்பிட்டால்தான் கும்பி குளிரும். ஆனால், மாத்தூர் தொட்டிப்பாலம், திற்பரப்பு போன்ற சுற்றுலாத்தலங்களில் மலை போல் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். அன்னாசிப்பழங்களைச்சாப்பிட இது போன்ற குறுக்கு வழிகள் எதுவுமே தேவையில்லை. தேனைப்பழிக்கும் இனிப்பு கொண்ட இவற்றைச் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம். ஜீரணத்துக்கு நல்லது. சைவ, அசைவ விருந்துகளில் பைனாப்பிள் பச்சடி பரிமாறப்படுவது எங்களூரில் சகஜம். ஜம்மென்று ருசிக்கும் அதை நாங்கள் 'ஜாம்' என்றுதான் குறிப்பிடுவோம்.  

மொபைலில் படமெடுக்கும்போது இருட்டிலோ அல்லது மிகக்குறைந்த வெளிச்சத்திலோ எடுப்பதைத் தவிர்த்து கூடுமானவரை நல்ல வெளிச்சத்தில் எடுப்பது நல்லது. Noise அல்லது grains எனப்படும் வெளிச்சப்புள்ளிகள் படத்தின் தரத்தைக் குலைப்பது தவிர்க்கப்படும். Instagram போன்ற தளங்களில் பதிவேற்றுவதற்காக எடுத்தே ஆக வேண்டுமென்ற தவிர்க்க முடியாத சூழல்களில் external flash பயன்படுத்திக்கொள்ளலாம். ஃப்ளாஷ் இல்லையே என்பவர்கள் வீட்டிலிருக்கும் மேசை விளக்குகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். பொதுவாக, நாம் எங்கேனும் உணவருந்தச்செல்லும்போது, அந்த உணவைப் படம் பிடிப்பது போக, நம் வீட்டிலும் ஏதேனும் உணவுப்பொருளைப் படமெடுக்க விரும்புவோம். அப்படிப் படமெடுக்கும்போது ஏதேனும் மேசை அல்லது சம தளத்தில் அப்பொருளை வைத்து, அதிலிருந்து 40 டிகிரி கோணத்தில் கேமரா இருக்கும்படி ட்ரைபாடில் அமைத்து எடுப்பது சிறந்த கோணத்தைத் தரும். 

தொடரும்..

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

பகிர்ந்து கொண்ட உணவுப் படங்கள் அனைத்தும் கண்களைக் கவர்கின்றன.

நன்னாரி இப்போதெல்லாம் முதல் போன்ற சுவையுடன் கிடைப்பதில்லை. அயினிப்பழம் உண்டதில்லை.

அழகிய படங்கள் - காலையிலேயே இப்படி உணவுப் படங்கள் பார்த்து மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது! சமைக்கணும் எனும் எண்ணமும் வருகிறது.

LinkWithin

Related Posts with Thumbnails