Tuesday, 20 June 2017

அயினிச்சக்கை என்ற அயினிப்பலா.

அயினிப்பலா அல்லது அயினிச்சக்கை என அழைக்கப்படும் இந்தப்பழத்தின் தாவரவியல் பெயர் Artocarpus hirsutus ஆகும். தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலுள்ள பசுமையிலைக்காடுகளில் அதிகமாக வளர்கிறது. முப்பத்தைந்து மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இம்மரம் வீட்டு ஜன்னல்கள், நிலை போன்றவற்றைச்செய்ய அதிகம் பயன்படுகிறது. கேரளாவின் புகழ் பெற்ற snake boats அயினி மரத்தை உபயோகித்தே அதிகமும் செய்யப்படுகிறது. தேக்கைப்போன்று இந்த மரமும் வலிமை கொண்டதே. கன்யாகுமரி மாவட்டத்திலிருக்கும் மாத்தூர், திருவட்டார், திற்பரப்பு போன்ற மலையும் மலை சார்ந்த இடங்களில் இது அதிகம் விளைகிறது. தொட்டிப்பாலத்தைக் காணச்செல்லும்போது வழி நெடுக இருக்கும் ரப்பர் தோட்டங்களினூடே அயினி மரங்களும் அதிகம் வளர்ந்திருப்பதைக்காணலாம். 

அயினிப்பலா உருவில் பலாப்பழத்தின் மினியேச்சர் போலவே இருக்கும். நன்கு பழுத்ததும் முள்முள்ளான மேல்தோல் அடர் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும். இப்பழத்தின் தோலை வெறும் கைகளாலேயே மெதுவாகப் பிரித்தெடுத்தால், உள்ளே ஆரஞ்சு நிறத்தில் புளியம்பழ அளவிலான சுளைகள் நடுத்தண்டுடன் ஒட்டிக்கொண்டு கொத்தாக இருப்பதைக் காண முடியும். வேனிற்காலங்களில் அதிகம் கிடைக்கும். லேசான புளிப்பும் இனிப்புமாக உண்ண மிகச்சுவையாக இருக்கும் இந்தப்பழம் சிறுவர்களுக்கும் குழந்தையுள்ளம் கொண்டவர்களுக்கும் மிக விருப்பமானது. ஆகவே, பள்ளிக்கூடங்களின் வெளியே இதை விற்றுக்கொண்டிருப்பது சகஜமான காட்சி. நான் தொடக்கப்பள்ளியில் பயின்று கொண்டிருந்தபோது ஒரு பழம் பத்துப்பைசாவிற்கு விற்கும். அப்போதெல்லாம் அது பெரிய தொகை. ஆகவே இரண்டு மூன்று பேர் சேர்ந்து காசு போட்டு பழம் வாங்கி பங்கு பிரித்துக் கொள்வோம்.
பழத்தினுள் இருக்கும் விதைகள் கருமை நிறத்திலிருக்கும். அவற்றையும் வறுத்துத் தோலுரித்துத் தின்னலாம். இவ்விதையின் பொடி, ஆஸ்துமாவிற்கு அருமருந்து எனச்சொல்லப்படுகிறது.

சமீபத்தில் நாகர்கோவிலுக்குப் போயிருந்த சமயம், டதி ஸ்கூலை ஆட்டோ கடந்தபோது அயினி கண்ணில் பட்டது. சிறுவயது நினைவுகள் மேலெழ, சுவைத்தே ஆக வேண்டுமென கொதியுண்டாயிற்று. மறுநாள் போய் வாங்கி வந்து விட்டேன். ஆஹா.. ஆஹா.. இதைக் கையிலெடுத்து எத்தனை வருடங்களாயிற்று. பழத்தை மெல்லக்கையிலெடுத்து சுளை பிரித்து வாயிலிட்டேன். அபாரம்!! அப்படியே நினைவுத்தேரிலேறி பள்ளி நாட்களுக்கே போய் விட்டாற்போலொரு ஆனந்தம். யாம் பெற்ற இன்பம் என் மக்களும் பெறட்டுமென்று பிள்ளைகளுக்கும் கொடுத்தேன். பழத்தைச் சுவைத்த மகள் சில விதைகளை மும்பைக்குக் கொண்டு வந்து மண்ணில் ஊன்றி அவையும் முளைத்திருக்கின்றன. கன்றுகளானதும் வெளியே கொண்டு போய் மண்ணில் நட வேண்டுமாம். நல்ல விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட்டது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
நாகர்கோவிலில் பள்ளிகளின் வெளியே மட்டுமன்றி, வடசேரியிலிருக்கும் கனகமூலம் சந்தையிலும் கிடைக்கும். மேலும், நாகர்கோவில்-திருவனந்தபுரம் நெடுஞ்சாலையிலும், சுங்கான்கடை எனும் இடத்தினருகே குவியல் குவியலாக விற்பனைக்கு வைத்திருப்பதைக் காணலாம்.

3 comments:

ஸ்ரீராம். said...

ஒருமுறை சுவைத்துப் பார்க்கவேண்டும்.

Ramani S said...

நிஜமாகவே இந்தப் பழம் குறித்து
இதுவரை எதுவுமே தெரியாது
படத்துடன் விரிவாகப் பதிந்தது
அறிந்து கொள்ளப்பயன்பட்டது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Ramani S said...

விளக்கத்துடன் புகைப்படங்கள்
பார்க்க மிக மிக சுவாரஸ்யம்
பாகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

LinkWithin

Related Posts with Thumbnails