Monday 24 April 2017

ஒரு சிறு இசை(வண்ணதாசன்) - புத்தக விமர்சனம்

கவிழ்ந்து படுத்துக்கொண்டு அடம்பிடிக்கும் குழந்தையாய் இதழ்களைப் பரப்பிக்கொண்டு குப்புறக் கவிழ்ந்து கிடக்கும் பாதிரிப்பூவை மென்கரங்களால் வருடி ஆற்றுப்படுத்தும் மென்காற்றைப்போன்றது வண்ணதாசனின் எழுத்து.. நம் மனம்தான் அந்தப்பாதிரிப்பூ. அம்மென்காற்றிலிருந்து பிறந்த “ஒரு சிறு இசை” நம்மை எந்தெந்த உயரங்களுக்கோ கொண்டு சென்று, லயிக்கவும் வாழ்வின் வண்ணங்களைத் தரிசிக்கவும் வைக்கிறது.

நித்திய வாழ்வின் வலிகளைச் சுமந்தலைகிற மனிதர்கள் சற்றே அன்பின் நிழலில் இளைப்பாறுவதும் அந்நிழல் அவர்களுக்குக் கிடைப்பதும் எத்தகைய கொடுப்பினை. பிரதிபலன் எதிர்பாராமல் அமிர்த ஊற்றாய் அன்பைச்சொரியும் மனிதர்கள் வாய்ப்பது எத்தகைய வரம். முரட்டு மனிதர்கள் என நாம் எண்ணுபவரிடத்தும் அத்தகைய அடைபட்ட ஊற்றுக்கண் திறக்கப்படக் காத்திருக்கக்கூடும். அத்தகைய அன்பை மையமாய்க்கொண்டவையே வண்ணதாசனின் கதைகள். அது ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே முகிழ்த்த அன்பாய் இருந்தால்தான் என்ன? எந்தப்பெயரிட்டு அழைத்தாலும் அன்பு அன்புதானே?. சற்றே நூல் பிசகினாலும் வேறு வண்ணங்கொள்ள சாத்தியமுள்ள அந்த அன்பை விகல்பமில்லாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்லிச்செல்வதுதான் வண்ணதாசனின் வெற்றி.

பதினைந்து சிறுகதைகளைக்கொண்ட இச்சிறுகதைத்தொகுப்பிற்கு, 2016-ம் ஆண்டுக்கான "சாகித்ய அகாடமி" கிடைத்துள்ளது. இத்தொகுப்பில் ஒவ்வொரு சிறுகதையிலுமே ஒரு சிறு இசை ஒலிப்பதை நாம் கேட்க முடிகிறது. அன்பின், நேசத்தின் இசை நம்மைச்சூழ்ந்து கொள்வதை உணர முடிகிறது. ஒவ்வொரு மனித மனமும் ஒரு பெட்டியே. எத்தனையோ ரகசியங்களை அது ஒளித்து வைத்துக்கொண்டு பொருத்தமான சாவிக்காகக் காத்திருக்கிறது. சரியான நேரத்தில் அது திறக்கப்படும்போது வெளிப்படும் சிறு இசை, அதற்குரிய அங்கீகாரத்தை அடைகிறது. மணமானவுடனே விதவையாகி விட்ட மூக்கம்மா ஆச்சியின் அடிமன ஆசையை அவள் அக்காள் புரிந்து கொண்டு, தன் கணவரின் சட்டையோடு மூக்கம்மா ஆச்சியின் புகைப்படத்தைச் சேர்த்து வைத்து அதற்குரிய அங்கீகாரத்தை வழங்கியதைப்போல், பிரமநாயகத்தை கல்பனா ஸ்டுடியோவில் தம்பதியாகப் போட்டோ எடுத்துக்கொள்ளச்சொல்ல வேண்டுமென்று கைலாசம் விழைவதைப்போல், இக்கதைகளில் ஆங்காங்கே ஒலிக்கும் சிறு இசை ஓர் இசைக்கோர்வையாய் நம் மனதை நிறைக்கிறது.

நிரப்புவதும் நிரம்புவதும் அத்தனை எளிதா? எத்தனை மார்ட்டின் மல்லிகள் பூத்தாலென்ன? எத்தனை குருவிகள் வந்து தண்ணீர் அருந்தினாலென்ன? மரமல்லிகள் உதிர்ந்து பாய் விரித்தாற்போல் பரந்து கிடந்தால்தான் என்ன? பிறந்த பெண்குழந்தையைப் பறி கொடுத்து விட்டு வெறுமையாய்க்கிடக்கும் குருசாமி-பார்வதி தம்பதியரின் முற்றம், “நம்ம வீட்டுக்குப் போலாமா?” என அவ்வீட்டின் தகப்பன் கூட்டி வரப்போகும் நாய்க்குட்டியால் நிச்சயம் நிரம்பி விடும். ஒரு தாமரைப்பூ போதும் ஒரு குளத்தை நிரப்ப. ஒரு பூ உதிர்ந்தாலும் இன்னொரு பூ இட்டு நிரப்பும்.. சுப்புவைப்போல். ஒரே ஒருத்தர் அத்தனை பேர் இடத்தையும் நிரப்புவதுதானே விசேஷம்.

காந்தி டீச்சருக்கும் நமசுவின் அப்பாவுக்கும் இருக்கும் உறவுக்கும் தண்டவாளங்களுக்கிடையே இருக்கும் உறவுக்கும் வித்தியாசமொன்றுமில்லை. அருகருகே இருந்தாலும் நெருங்கிச்சென்று இணைவது போல் தோற்றம் காட்டினாலும் இணைவதேயில்லை. அப்படி இணைந்து விட்டாலோ அதற்கு மேல் ஒன்றுமில்லை. ஆகவே அதை அப்படியே தாண்டிப்போய் விட வேண்டியதுதான். சிந்திய தண்ணீரைத் தாண்டுவதைப்போல் நமசுவின் அப்பா அவ்வுறவைத் தாண்டிச்செல்வதும், காந்தி டீச்சர் தண்டவாளத்தைத் தாண்டிச்செல்வதும் ஒன்றுதான். 

பொழுது போகாமல் ஒவ்வொருவர் வாழ்விலும் விளையாடும் சதுரங்கம்தான் வாழ்க்கையும் அதன் நிகழ்வுகளும் அது ஏற்படுத்தும் பாதிப்பும். வெற்றி தோல்வி மனப்பான்மை ஏதுமின்றி, வாழ்வதை ஒரு கடமையாக மட்டும் எடுத்துக்கொண்டு வெறுமையான மனங்களுடன் இருப்பது வேறென்னவாக இருக்க முடியும்? இத்தனை சிறு களத்தில் எத்தனை போட்டி, பொறாமை, சந்தேகம், சக உயிரின் மீது அன்பின்மை, சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் வெட்டி வீழ்த்தத்துடிக்கும் வஞ்சகம், புரிந்து கொள்ளாத சித்திரவதை என எத்தனை விதமான நகர்வுகள்!! அத்தனைக்கும் ஈடு கொடுத்து விளையாடி முடித்தபின் இறுதியில் கணக்குப்பார்த்தால் நம் கையில் மிஞ்சுவதென்ன? வாழ்நாள் முழுவதும் ஒருவரோடொருவர் இணக்கமின்றி இருக்கும் அம்மச்சி டீச்சருக்கும் அவள் கணவனான சூரிக்குமிடையே நடக்கும் போராட்டத்தில் தனுக்கோடிக்கும் நிச்சயம் ஒரு பங்கிருக்கிறது. அறிந்தோ அறியாமலோ அச்சதுரங்கத்தில் அவரும் ஒரு காயாக இடம் பெற்று, அலைக்கழிந்து பின் தானாகவே விலகிச்சென்று விடுகிறார். அதன்பின்னும் அவர்கள் மனம் ஒட்டாமல் வாழும் வாழ்வே “பொழுது போகாமல் ஒரு சதுரங்கம்” 

நெருக்கடிகளும் சிக்கல்களும் நிறைந்து புழுங்கும் வாழ்வின் இடுக்குகளில் அன்பின் தென்றல் வீசுவது எத்தனை சுகம்!! அப்படி அன்பு வெளிப்படும் அரிய தருணங்களை வெளிப்படுத்தி காட்சிப்படுத்துபவை வண்ணதாசனின் கதைகள். உரைநடை வரிகளினூடே இழையோடிச்செல்லும் கவிநயம் வாசிப்பை ஆனந்தமானதாக்குகிறது. படிமங்கள் நிரம்பிய சிறுகதைகள் எளிமையான வரிகளால் பின்னப்பட்டிருந்தாலும் சற்றே ஆழ்ந்து வாசிக்குங்கால், அத்தனை கனமான உட்பொருளையும் கொண்டுள்ளது. சிந்திக்குந்தோறும் அதன் பொருள் விரிந்து வாசகனின் சிந்தனையை விரிவாக்குகிறது. வாசக மனதை அங்கிங்கு அலைய விடாமல் கட்டிப்போடும் சீரான ஒழுக்குப்போன்ற மொழிநடை இன்னொரு பலம். ‘குண்டு பல்புக்கும் முறுக்கு வயருக்கும் இடையே தொங்கிய நூலாம்படையின் நிழல் எதிர்ச்சுவரில் அரூபச் சித்திரங்களை வரைந்து வரைந்து விலகியது’ போல் நம் மனதில் இச்சிறுகதைத்தொகுப்பின் மாந்தர் வரையும் சித்திரங்களும் அத்தகைய அரூபமானதே.

ஆசிரியர்: வண்ணதாசன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்.
இணையத்தில் வாங்க: 





No comments:

LinkWithin

Related Posts with Thumbnails