Wednesday 19 April 2017

செம்பருத்தி(தி.ஜானகிராமன்) - புத்தக விமர்சனம்

தி.ஜாவின் நாவல் வரிசையில் மனிதர்களின், உறவுகளின், ஆண்-பெண் உறவுச்சிக்கல்களை நுணுக்கமாக அணுகும் இன்னொரு நாவல்தான் “செம்பருத்தி”. ஆனால் மற்ற நாவல்களை விட இதில் மன விசாரங்களும், தத்துவ விசாரங்களும் சற்று அதிகமாகவே இடம்பெற்று அலசப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் அவரது நாவல்களில் “செம்பருத்தி” தனியிடத்தைப் பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது.

விருப்பத்திற்கும் நடைமுறைக்கும் இடையிலிருக்கும் முரண்பாடு, எதிர்பார்ப்புக்கும் அது கிடைப்பதற்கும் இடையிலேற்படும் ஊசலாட்டம், உறவுகளைப் பேணிக்காக்கும் இச்சைக்கும் அது பலிப்பதற்கும் இடையிலுள்ள போராட்டம் என இவற்றை வெவ்வேறு காலப்பின்னணியில் வைத்து அலசும் புனைவை சட்டநாதன் உட்பட்ட கதை மாந்தர்கள் வழியாக நம்முன் வைக்கிறார் தி.ஜா. பணத்தை விட மனிதர்களைச் சம்பாதித்து அவர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்தியமாகி, காலங்கள் கடந்தபோதும் அவை நிலைத்திருக்கச்செய்வதே மனிதனின் உண்மையான வெற்றி. 

“செம்பருத்தி”யின் சட்டநாதனும் இவ்வகைதான். பெண்கள் நிரம்பிய அவனது உலகத்தில் அவர்களூடே பயணித்து அவர்களைப் புரிந்து கொள்ள, அவர்களைத்தக்க வைத்துக்கொள்ள முயலும் அவனது வாழ்வும், அவன் கடந்து வரும் மூன்று பெண்கள் அவனது வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகளுமே இந்நாவல். இவற்றைக்கூறுவதன் மூலம் குடும்பம், சமுதாயம் இவற்றைக்கட்டமைப்பதில் பெண்களின் பங்கு எத்தகையது என்பது புரிய வருகிறது. அப்பெண்களின் இயல்புகளையும் அவர்களது துக்கம், கண்ணீர், மென்னகை போன்றவற்றையும் கூறி வரும்போதே அவர்களிடையே சிக்கித்தவிக்கும் ஆணின் கதையும் கூறப்பட்டிருப்பது சிறப்பு. பெண் மட்டுமல்ல ஆணும் பல சமயங்களில் பரிதாபத்துக்குரியவனே. 

பால்யத்தில் பிரியம் வைத்த பெண் சந்தர்ப்ப வசத்தால் தனக்கு அண்ணியாகி, எதிர்பாரா விதமாக விதவையுமானபின், ஒரு சந்தர்ப்பத்தில் அவள் தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியபின்னும் அந்நெருப்பில் பற்றிக்கொள்ளாமல் அதே சமயம் அதன் அருகே வாழ்ந்து வரும் நனைந்த பஞ்சான சட்டநாதன் தன்னறத்தை இயல்பாகக்கொண்டு வாழ்வின் ஓட்டத்தில் அதைத்தொலைத்து விடாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இயல்பான மனிதன். சின்ன அண்ணன் விட்டுப்போன குடும்பத்தைச் சுமந்து கொண்டிருக்கும் அவனது தோளில் வாழ்ந்து நொடித்த பெரியண்ணனின் குடும்பச்சுமையும் கூடுதலாய் வந்து அமைகிறது. இறக்குந்தருவாயில் சின்ன அண்ணன் பார்த்து வைத்து விட்டுப்போன புவனாவை மணந்து கொள்வதன் மூலம் சட்டநாதனுக்கெனவும் ஓர் குடும்பம் அமைகிறது. பெரியண்ணனின் சொற்படிக்கூறுவதானால் கருடாழ்வார் போல் அனைவரையும் தாங்கும் சட்டநாதன், தேள் கொடுக்காய்க் கொட்டும் பெரிய அண்ணியையும், “பார்த்துக்கிட்டே இருந்தாப்போதும்” என தன் உள்ளக்கிடக்கையை காலங்கடந்து வெளிப்படுத்தும் சின்ன அண்ணியையும் சேர்த்து தங்களுக்கிடையேயான கண்ணியமான உறவு கெட்டு விடாமல் தாங்குகிறான். முற்றிலும் வேறுபட்ட இம்மூவரின் குணாதிசயங்களும் அக்குடும்பத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் இந்நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் தி.ஜாவின் தனித்தன்மை. தஞ்சை மண்ணின் ஒரு சிறு கிராமத்தில் நிகழும் கதைக்களத்தின் துணை மாந்தர்களும் தன்னிருப்பை நம்முள்ளத்தில் ஆழப்பதிக்கிறார்கள் கிட்னம்மாவையும் ஆண்டாளையும் போல்.

தி.ஜாவின் செம்பருத்தியில் பெண்களின் துர்க்குணங்கள் சற்று அதிகமாகவே விவரிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இது ஆணின் மேல் ஏற்படும் பரிதாபத்தை சற்று அதிகப்படுத்துவதற்காகவும் இருக்கலாம். அதிலும் சட்டநாதனின் பெரிய அண்ணியின் பாத்திரப்படைப்பு சிக்கலான ஒன்று. அவளது துர்க்குணங்கள் காரணமாக அவளை, “புளியமரம்” என்றே அனைவரும் ஜாடையாகக்குறிப்பிடுகின்றனர். தன் சுபாவத்தால் பிறரை நிம்மதியிழக்கச்செய்யும் அவள் மேல் நமக்கு ஆத்திரமும் அசூயையும் ஏற்படும் அதே சமயம் தன் குணத்தை எண்ணி வருந்தி, தன்னையே வெறுத்து பட்டினி கிடந்து தன்னையே வருத்திக்கொண்டு இறக்கும் அவள் மேல் ஒரு துளி அனுதாபமும் ஏற்படுகிறது. 

கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைக்கப்பட வேண்டுமென்றான் பாரதி. கணவன் பிற மகளிரை விழைவதை எந்தப்பெண்ணும் சகித்துக்கொள்ள மாட்டாள். பொறுத்துக்கொண்டு அன்பு செலுத்த மாட்டாள். அவள் அவனுக்கு உண்மையாக இருப்பதைப்போலவே அவனும் அவளுக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்று அவள் எதிர்பார்ப்பது இயற்கைதானே. அது பிறழும்போது அவள் வருந்துவதும் சினம் கொள்வதும் இயல்புதானே.. இதிலென்ன தவறு இருக்கிறது? ஆனால், அவள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு இன்முகத்துடன் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் ஆண், அவள் தன் மனப்புழுக்கத்திற்கு வடிகாலாக யாரோடோ வெறுமனே பேசிச்சிரித்தால் அவளைச் சந்தேகப்படுவது எவ்விதத்தில் நியாயம்?. பெரியண்ணியின் பாத்திரப்படைப்பைப் பொறுத்தவரை அவள் தன் கணவனின் மேலுள்ள கசப்பைத்தான் பிறர் மேலும் துப்புகிறாள். அவள் மனதில் ஊறிக்கசியும் அக்கசப்பே அவளை அனைவரும் வெறுக்கக்காரணமாக அமைந்து விடுகிறது. அவளைச் சற்றேனும் புரிந்தவள் புவனா மட்டுமே.

விரும்பியவனுக்கு அண்ணியாக சந்தர்ப்ப வசத்தால் ஆக நேர்ந்தாலும் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்த குஞ்சம்மா, விதவையானபின், சட்டநாதனைப் பார்த்துக்கொண்டேயாவது வாழ்ந்து விடுவது என முடிவெடுத்து அந்நேசத்தை ஆராதித்து அவ்வீட்டில் வாழும்போது அவள் மேல் ஏற்படும் பச்சாதாபம், தனக்கும் அவனுக்குமான உறவை அவன் மனைவியிடமும் ஒன்று விடாமல் கூறியிருக்கிறான் என அறிந்து அவனை வெறுத்து தன் பெண்ணோடு நிரந்தரமாக இருக்கப் புறப்படும்போது கலைந்து விடுகிறது. அவ்வளவுதானா மனிதர்கள்! எனத்தோன்றுகிறது. எனினும், தன்னுடைய அந்தரங்கம் வெளிப்பட்டு விட்ட இடத்தில் ஒரு மனுஷியால் மீதமுள்ள காலத்தை எவ்வித உறுத்தலுமில்லாமல் கடந்து விட இயலுமா? என்ற கேள்வியையும் விதைக்கிறது.

ஒரு ஆதர்ச மனைவியாக, அவ்வீடு எந்தச்சிக்கலுமில்லாமல் ஓட அடிப்படையான அச்சாணியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் புவனாவின் படைப்பு இப்படிக்கூட ஒரு பெண் இருப்பாளா என வியக்க வைக்கிறது. அதுவும் தன் கணவன் கல்யாணத்திற்கு முன் பிரியம் வைத்த பெண்ணே தனது ஓர்ப்படியாக ஒரே வீட்டில் வாழும்போது, அதை அவள் எதிர்கொண்ட விதம்தான் என்ன! தினந்தோறும் நடக்கும் நல்லது கெட்டதுகளை கணவன் தன்னோடு பகிரும்போது அதைக்கேட்டு, தேவைப்படும்போது நல்ல வழியும் காட்டி அவனுக்கு ஒரு நல்ல துணையாக இருந்தவள் மெனோபாஸ் சமயத்தில் அதே சின்ன அண்ணியோடு கணவனைத்தொடர்பு படுத்தி அவன் மேல் சந்தேகப்பட்டு தங்கள் வாழ்வை நரகமாக்கிக்கொள்ளும்போது, அத்தனை நாள் அவன் அவள்மேல் இறக்கி வைத்த பாரத்தைச் சுமந்த துன்பம்தான் இப்படி வெளிப்படுகிறதோ எனத்தோன்றுகிறது. கணவன் மனைவிக்கிடையே ஒளிவு மறைவும் வேண்டுமோ என ஐயத்தை ஏற்படுத்துகிறது. அர்த்தநாரீசுவரான சிவனாலேயே தன் மனைவியுடன் இரண்டறக்கலக்க இயலவில்லை எனும்போது நாம் யார்?

சரளமான நடை, பெரும்பாலும் உரையாடல் மூலமாகவே கதையை நகர்த்தும் உத்தி, கதையின் முடிச்சை சொற்களில் பொதிந்து தரும் லாகவம் என தி.ஜாவின் முத்திரை இந்நாவலிலும் அழுந்தப்பதிந்துள்ளது. சாவி ஆசிரியராக இருந்த சமயம் தினமணி கதிரில் 1968-ம் வருடம் தொடராக வந்தது இந்த நாவல்,

ஆசிரியர்: தி.ஜானகிராமன்.
வெளியீடு: ஐந்திணைப்பதிப்பகம்(2003-செம்பதிப்பு)
இணையத்தில் வாங்க: 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails