Sunday, 31 December 2017

பழங்கணக்கு..

மயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரரின் தரிசனத்துடன் ஆரம்பித்த 2016 ஓரளவு இனிமையான நினைவுகளையே தந்து சென்றிருக்கிறது. பயணத்துடன் ஆரம்பித்ததாலோ என்னவோ!! போதும் போதுமென உடலும் மனமும் அலுக்குமளவுக்கு, சென்னை முதல் குமரி வரையிலான ஏகப்பட்ட இடங்களுக்குச் சுற்றுப்பயணமாகச் சென்று கண்டு களித்து வந்தோம். அவற்றில் இராமேஸ்வரம், திருநள்ளாறு போன்ற இடங்களில் தீர்த்தமாடியதும், ஆற்றுக்கால் பகவதி கோவிலுக்கு முதன் முறையாகச் சென்றதும் மறக்க முடியாத ஒன்று. திருப்பதியில் ஆரம்பித்த அப்பயணத்தில் ஒவ்வொரு இடங்களுக்கும் செல்லுமுன், முந்தின நாள்தான் தத்கால் முறையில் பயணச்சீட்டுகளைப் பதிவு செய்து கொண்டே சென்றோம். ஏனெனில், ஒவ்வொரு ஊரிலும் எத்தனை நாட்கள் தங்கப்போகிறோமென எங்களுக்கே தெரியாது.  சீட்டுகள் உறுதிப்படுத்தப்படும் வரை சற்றே திக்திக்கென இருந்த அந்தப்பயணம் த்ரில்லிங்காகவும் இருந்தது. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலின் எதிரிலிருந்த ராயாஸில் தங்கியிருந்தும் கோவிலுக்குச் செல்லாமல் வந்தது பெரிய மனக்குறை. வரும் வருடங்களிலாவது கும்பகோணத்துக்கு மட்டுமென ஒரு பயணம் சென்று வர வேண்டும். 

சென்னையில்நுனிப்புல் உஷா, நம் வல்லிம்மா மற்றும் அவர்கள் வீட்டு செடிகொடிகளுடன் நடந்த பதிவர் சந்திப்பும், வித்யா சுப்ரமணியன் அவர்களுடன் நடந்த ஒன் டு ஒன் பதிவர் சந்திப்பும், ஃபேஸ்புக் தோழிகளான கீதா, செல்வி, மாலா, சுமதி, ஜெயந்தி, கலைச்செல்வி, ஆகியோரைச் சந்தித்து அடித்த கொட்டமும் பசுமையானவை. 

எழுத்திலும் வாசிப்பிலும் ஒரு சிறிய மைல்கல்லை எட்ட முடிந்தது சிறு மகிழ்ச்சி. வலைப்பூவை வாடவிடாமல் சராசரியாக மாதந்தோறும் ஒரு இடுகையாவது இட முடிந்ததும், முதன்முறையாக புத்தக விமர்சனம் எழுத ஆரம்பித்ததும் மகிழ்ச்சியே. தவிர, எங்கள் "பயோனியர் குமாரசுவாமி கல்லூரி"யின் பொன்விழா ஆண்டு மலரில் என் படைப்பு வெளியானது பெருமகிழ்ச்சியைத்தந்தது.

உடல் நலிவும், எங்கள் குடும்பத்திலேற்பட்ட ஒரு பேரிழப்பின் காரணமாக விளைந்த மனநலிவும் சற்றே சோர்வுறச்செய்ததால், வாசிப்பு மற்றும் ஒளிப்படமெடுப்பதில் மனதைத் திசை திருப்பி சற்றே மீண்டு வந்திருக்கிறேன். எது எப்படியானாலும், காமிராவைக் கீழே வைத்து விடாமல் ஃப்ளிக்கரில் தினமும் இரண்டு படங்களைப் பதிவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இன்றைய சூழ்நிலையில் அதுதான் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கச் செய்கிறது. டியெஸ்ஸெல்லார் வகை காமிராக்களுடன் போட்டி போடும் வகையில், நல்ல பிக்ஸல் எண்ணிக்கையுடன் மொபைல் அலைபேசிகள் வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், ஒளிப்படக்கலையின் விதிமுறைகட்குட்பட்டு மொபைலிலும் ஏராளமான படங்களை எடுக்க முயன்று ஓரளவு வெற்றியும் கிடைத்திருக்கிறது.  "மொபைல் க்ளிக்ஸ்" என்ற குறிச்சொல்லுடன் அவற்றை ஃபேஸ்புக்கில் வலையேற்றி வருகிறேன். விரைவில் அவை வலைப்பூவிலும் காணக்கிடைக்கும்.

சோம்பி முடங்கியிராமல், முடிந்ததைச் செய்து உடலையும் மனதையும் இயக்கத்தில் வைத்திருப்பது இருத்தலின் பொருட்டென்றாலும், அதிலும் ஓர் மனநிறைவு ஏற்படும்படி இயங்குவதே அதன் வெற்றி. இல்லையெனில் நேரமும் உழைப்பும் வீணே.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நலமே விளையட்டும்.


Sunday, 24 December 2017

நாஞ்சில் நாட்டு சமையல் (இடிசக்கை துவரன்)

காயாகி.. கனிந்து.. என ஒவ்வொரு பருவத்தையும் கடந்து வரும் பலாவை பிஞ்சுப்பருவத்தில் மட்டும் விட்டு வைப்போமா என்ன? கேரளாவிலும் அதை அடியொற்றி நாஞ்சில் நாட்டிலும் பொடித்துவள், இடிசக்கை துவரன் என வெவ்வேறு பெயர்களில் சமைக்கப்படும் பலாப்பிஞ்சு துவரன் மிகவும் பிரசித்தி பெற்றது. நெல்லை மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் இது சமைக்கப்படுகிறது. இதைச்செய்வதற்கு சுமார் ஏழு அங்குலம் அளவு விட்டமுள்ள பலாப்பிஞ்சே மிகவும் பொருத்தமானது. அதிகம் முற்றியதானால் விளைய ஆரம்பித்திருக்கும் பலாக்கொட்டைகள் வாயில் கடிபட்டு, இடிசக்கைத்துவரத்தின் ருசியைக் கெடுத்து விடும். 

அந்தக்காலத்திலெல்லாம், தோல் சீவிய பலாப்பிஞ்சை நிற்க வைத்து,  கத்தியால் கொத்திக்கொத்தியே துண்டுகளாக்குவார்களாம். இல்லையெனில் பெரிய துண்டுகளாக்கிக்கொண்டு உரலிலிட்டு இடித்துச் சதைப்பார்களாம். இதன் பொருட்டே இது இடிசக்கைத்துவரன் எனப்பெயர் கொண்டிருக்கக்கூடும் என்பது ஊகம். மிகவும் ருசியான இந்த துவரனைச் சமைக்க கையில் ஓரளவு வலு இருக்கும் தினமாக தேர்வு செய்து  கொண்டாலொழிய இதைச்சுவைக்கும் பாக்கியம் கிடைப்பதரிதாகவேயிருந்திருக்கக்கூடும்.

முதலில், பலாப்பிஞ்சை நிற்க வைத்து, கூர்மையான கத்தியில் சொதசொதவென எண்ணெய்யைத் தடவிக்கொண்டு  முள்முள்ளாக சொரசொரவென்றிருக்கும் பலாப்பிஞ்சின் தோலைச் சீவிக்கொள்ள வேண்டும். பின், நான்காக வகுந்து, நடுவிலிருக்கும் கெட்டியான பகுதியை வெட்டி அகற்றி விட வேண்டும். எண்ணெய்யைத் தடவிக்கொள்வதால் பலாப்பிசின் கைகளிலோ கத்தியிலோ ஒட்டாதென அறிக. பின், பலாப்பிஞ்சை ஓரங்குல அளவில் துண்டுகளாக வெட்டிக்கொண்டு, மிக்ஸியில் நாலைந்தாகப் போட்டு, துருவிய தேங்காய் அளவிலான பக்குவத்தில் துருவிக்கொள்ளவும். அதற்கேற்ற ப்ளேடையே மிக்ஸியிலும் பொருத்திக்கொள்ள வேண்டும். நேரத்தை மிச்சப்படுத்த எண்ணி, துண்டுகளை அதிகமாக அள்ளிப்போட்டு அரைத்தால், மிக்ஸி ஓவர்லோட் ஆகி மண்டையைப் போட்டு விடும்.. கவனம்.

இத்தனை சிரமப்படாமல் தோல் சீவி, துருவ இன்னொரு உபாயத்தையும் கையாளலாம். அதாவது, பலாப்பிஞ்சை காம்பு நீக்கி, வட்ட வட்டமாக வெட்டிக்கொண்டு, ஆவியில் வேக வைத்தால் தோலை எளிதாக நீக்கி விடலாம். அதன் பின் துண்டு போட்டு, மிக்ஸியில் துருவிக்கொண்டால் பிசின் ஒட்டிக்கொள்வதைத் தவிர்க்க முடியும். துருவுவதும் எளிது. இந்த டிப்ஸைக்கொடுத்த நானானிம்மாவுக்கு நன்றிகள்.
துவரனுக்கான மசாலாவையும் எளிதாகத் தயாரித்துக்கொள்ளலாம். ஒரு கை நிறைய அள்ளிக்கொண்ட தேங்காய்த்துருவலுடன்அரை ஸ்பூன் சீரகம், நாலைந்து நல்லமிளகு, ஒரு பல் பூண்டு, மஞ்சட்பொடி, காரத்துக்கேற்ப பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். நல்லமிளகு சேர்ப்பதால் வாயுத்தொந்தரவு தவிர்க்கப்படும். மேலும் பச்சை மிளகாய் வேண்டாமென்று நினைத்தால் மிளகாய்ப்பொடி சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், சாஸ்திரோக்கமாகச் செய்ய நினைப்பவர்கள் பச்சைமிளகாயையே நாடுவர்.

ஒரு வாணலியில் சிறிது தேங்காயெண்ணெய்யைச் சூடாக்கி, கடுகும் உளுத்தம்பருப்பும் போட்டு வெடித்தவுடன், கறிவேப்பிலையைச் சேர்க்கவும். பொரிந்ததும், துருவிய பலாப்பிஞ்சை அதிலிட்டு, லேசாகத்தண்ணீர் தெளித்து ருசிக்கேற்ப உப்பு சேர்த்துக்கிளறி மூடியிட்டு முக்கால் பதம் வரை வேக விடவும். இடையிடையே சற்றுக்கிளறி விட்டால் அடிப்பிடித்து கருகுவது தவிர்க்கப்படும். பிஞ்சுத்துருவல் வெந்ததும், துவரன் மசாலாவை அதில் சேர்த்து, கரண்டிக்காம்பால் லேசாகக் கிளறி மறுபடியும் மூடி ஐந்து நிமிடங்களுக்கு வேக விடவும். மசாலாவும் பலாப்பிஞ்சுத்துருவலும் செம்புலப்பெயல் நீர் போல் இரண்டறக்கலந்து மணம் வந்ததும், அரை ஸ்பூன் தேங்காயெண்ணெய்யைச் சேர்த்து, ஒரு நிமிடம் கிளறி நீர்ப்பதம் வற்றி வந்ததும் இறக்கி விடலாம்.

இதுவே, வேக வைத்தபின் தோல் நீக்கித்துருவப்பட்டதானால் தாளிதத்துடன் துவரன் மசாலாவைச் சேர்த்து உப்பிட்டு, மூடியிட்டு வேக வைக்கவும். மூன்று நிமிடங்களில் மசாலா வெந்து விடும். அதன் பின் பலாப்பிஞ்சுத் துருவலையிட்டு லேசாகக் கிளறி மூடியிட்டு இரண்டு நிமிடம் வேக விடவும். பின்னர் மூடியைத்திறந்து நீர்ப்பதம் வற்றி பொடித்துவள் பக்குவமானதும் இறக்கி விடலாம்.

ரசம், தயிர், வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு என்று சாதங்களுடன் மட்டுமலாது, ஒரு கிண்ணத்திலிட்டு சும்மாவே ஒரு பிடி பிடிக்கலாம்.

Sunday, 3 December 2017

ஃபேஸ்புக்கில் பேசியவை - 10

ஜன்னலோர இருக்கையிலமர்ந்து, இரவில் முழுமையடையாத தூக்கத்தைத் தொடரும் அவளுக்கோ அருகமர்ந்திருந்த மற்றவர்களுக்கோ, அவளது நிறுத்தத்தை ரயில் கடந்து செல்வது தெரிந்திருக்க நியாயமில்லைதான்.

மடியிலிருத்திய குழந்தையை
முந்தானையால் மூடிக்காப்பதையொத்ததே
கொத்தாய்க் காய்த்தவற்றை
இலைகளால் கவிந்து காக்கும் மாமரத்தின்
தாய்மையும்.

தன் மனப்போக்கில்
எல்லாம் செய்து முடித்தவன்
இறுதிவிளைவுகளுக்கு மட்டும்
விதியைத் துணைக்கழைக்கிறான்
நினைக்க வைத்ததுவும்
நடத்தி வைத்ததுவும் விதியேயென்றால்
முடித்து வைத்ததுவும்
அதுவேயாய் இருக்கட்டும்.

சிலர் இறந்தபின்தான் அத்தனை நாள் அவர்கள் இருந்ததையே நினைவுகூர்கிறோம்.

செம்பாய் இருக்கும் இலைகளை மரகதமாக்கும் இயற்கையை விடப்பெரிய இரசவாதி யாருமில்லை.

விலகிச்செல்வது போல் போக்குக் காட்டி விட்டு சரேலென்று திரும்பி தாக்க வரும் யானையைப்போன்றதே, நீளுறக்கத்திலிருந்து மறுபடியும் விழித்தெழும் பிரச்சினைகள்.

கிளம்புவதும் சென்றடைவதுமாக, இன்னும் நிலை சேராமல் பயணப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன சாலைகள்.

பூசைகள் முடங்கிய வனக்கோவிலாயினும் ஆண்டிற்கு ஒருமுறையேனும் சிறப்பு கிடைத்து விடுகிறது தேவியாய் அமர்ந்த தெய்வத்திற்கு.

விழுந்து விழுந்து படித்த பதிலை மாங்கு மாங்கென்று விடைத்தாளில் எழுதிக்கொண்டிருந்தபோது கணகணவென்று அடித்த கடைசி மணியால் பாதியிலேயே விட்டு வந்ததையெண்ணி மூசுமூசென விசும்பிக் கொண்டிருந்த போது கிணுகிணுவென அடித்தது மொபைல் அலாரம்.

எதையாவது ஏற்றுக்கொள்ளவோ தள்ளிப்போடவோ இயலாவிடில், சமயோசிதமாக சமாளித்து விடல் நன்று. இம்மூன்றில் பிற இரண்டு அம்சங்களுக்கும் கூட இந்த விதி சாலப்பொருந்துவது ஒரு முக்கோணக்காதல் கதையை ஒத்திருக்கிறது.

Wednesday, 18 October 2017

ஒளிக்கொண்டாட்டம்

ஒளியில் குளித்துக்கொண்டிருக்கின்றன வட மாநில நகரங்கள். காணுமிடமெங்கும் சரவிளக்குகளாலும் Rice lights எனப்படும் சீன சீரியல் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருண்ட மென்பட்டில் இறைக்கப்பட்ட நவமணிகளென மின்னுகின்றன. கண்கொள்ளாக் காட்சிதான் எனினும் பட்டாசுகளின் அதிகப்படியான ஒலியிலிருந்து சற்றே காதுகளையும் பாதுகாத்துக் கொள்வது நல்லது.


வட மாநிலங்களில் தீபாவளிப் பண்டிகை ஒரு நாள் கொண்டாட்டத்தோடு முடிந்து விடுவதில்லை. மேலதிக விவரங்களுக்கு கடந்த வருடங்களில் எழுதப்பட்ட பதிவுகளின் சுட்டியைச் சொடுக்கவும்.


தினம் தினம் தீபாவளி...அனைவருக்கும் இனிய விழாக்கால நல்வாழ்த்துகள்.

Monday, 18 September 2017

கண்பதி - 2017

இந்த வருடம் பிள்ளையார் சதுர்த்தியை அக்கம்பக்கத்து பண்டல்களில் வீற்றிருந்த பிள்ளையார்களைத் தரிசித்தும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் விதவிதமான பிள்ளையார்களைக் கண்டு களித்தும் சுருக்கமாக முடித்துக்கொண்டோம். எனது இளைய சகோதரன் ஒருவன் எதிர்பாராவிதமாக இவ்வுலக வாழ்வை நீத்ததால் இந்த வருடம் எங்களுக்குப் பண்டிகைக்கொண்டாட்டம் எதுவுமில்லை. ஆயினும் அழகுப்பிள்ளையார்களைக் கண்டபோது க்ளிக்காமல் வர மனது ஒப்புக்கொள்ளவில்லை. கையிலிருந்த மொபைல் போனில் க்ளிக்கியவை உங்கள் பார்வைக்காகவும் எனது வலைப்பூவில் நிரந்தரக்கொலுவாகவும்..


கடந்த வருடங்களில் சதுர்த்திக்கொண்டாட்டம்..

துன்பம் நீக்கும் தும்பிக்கையான்
கிடைப்பது கிடைக்காமல் இருக்காது.

நான் படித்த நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியின் பொன்விழாக் கொண்டாட்டமும் முன்னாள் மாணவர் சந்திப்பும் இந்த வருடம் மார்ச் மாதக்கடைசியில் நடைபெற்றன. கலந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை வழக்கம் போல் கடைசி நிமிடத்தில் நிராசையானது. எனினும் நான் எழுதியனுப்பிய கட்டுரை பொன்விழா மலரில் இடம் பெற்றதன் மூலமாக மறைமுகமாகவேனும் அதில் கலந்து கொண்ட திருப்தி) என்ன ஒன்று.. படைப்பை அனுப்ப கடைசி நாளாகி விட்டபடியால் கட்டுரையை மெயிலில் அனுப்பி, பொன்விழாவை நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்த எங்கள் தமிழ்த்துறைத்தலைவர். திரு. மாதவன் அவர்களிடம் சேர்ப்பிக்குமாறு என் சீனியரும் குமுதம் நிருபருமான திருவட்டாறு சிந்துகுமார் அண்ணனுக்குத்தான் கொஞ்சம் சிரமம் கொடுக்க வேண்டியதாயிற்று :)
வாட்ஸப் புண்ணியத்தில் விழா நிகழ்ச்சிகளைக் கண்டு களித்ததைப் போலவே பொன்விழா மலரையும் காண வேண்டுமென்று ஆசை. அனுப்பித்தருவதாக அண்ணன் கூறியிருந்ததால் வரும்போது வரட்டுமென்று காத்திருந்தேன். அப்போதுதான் தமிழகத்தில் கோவில்களுக்குச் சென்று வர வேண்டுமென்று பிள்ளைகள் திட்டம் போட்டு, பயணம் கிளம்பும் வாய்ப்பு வந்தது. நாங்களும் திருப்பதி, திருநள்ளாறு, கூத்தனூர், ராமேஸ்வரம், மதுரை, திருநெல்வேலி என எல்லாக் கோவில்களுக்கும் போய்விட்டு நாகர்கோவிலை வந்தடைந்தோம்.

அன்றைக்கு நாகரம்மன் கோவிலுக்குப் போகலாமென்று கிளம்பி ஆட்டோ ஸ்டாண்டுக்கும் வந்தபின், திடீரென்று கன்யாகுமரி போகலாமென்று ப்ளான் திசை மாறியது. கன்யாகுமரியென்றால் கொஞ்சம் நேரம் கழித்து கூட போய்க்கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டது. இப்போதுதான் நான், அப்டீன்னா.. மாதவன் சாரைப் போய்ப் பார்த்துட்டு வரலாம்" என நாகர்கோவிலுக்கு வந்த நாள் முதலாக சுமந்து கொண்டிருந்த ஆசையை வெளியிட்டேன். ஆச்சரியப்படும் விதமாக குடும்பம் ஒத்துக் கொண்டதும் மனசு மாறுவதற்குள் அவர்களை ஆட்டோவில் அள்ளிப்போட்டுக் கொண்டு வடசேரி பெரியதெருவிலிருக்கும் சார் வீட்டுக்குப் போனோம். முன்னரே போனில் அனுமதியும் அட்ரசும் வாங்கியிருந்ததால் சாரும் எங்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.

அன்று கண்டது போலவே அப்படியே இருந்த மாதவன் சாரை அடையாளம் கண்டுகொள்ள எனக்குச் சிரமமில்லை. மலர் தொடர்பாக அடிக்கடி மொபைலில் பேசியிருந்ததால் அவரும் என்னை அடையாளம் கண்டுகொண்டார். நான் எந்த வருடம் அங்கு படித்தேன் என்பதையும் குடும்பத்தையும் பற்றி ஆர்வமுடன் கேட்டுத்தெரிந்து கொண்டார். முகத்தை வைத்துதான் அவரால் என்னை அடையாளம் காண முடியவில்லை. ஆசிரியரிடம் எத்தனையோ மாணவர்கள் பயின்றிருப்பார்கள். அத்தனை பேரையும் நினைவில் கொள்ள இயலாதுதானே.

மாதவன் சாரின் மனைவி திருமதி. பிரேமா மணி அவர்கள் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் ஆசிரியை என்று அறிந்ததும் இரட்டிப்பு சந்தோஷம். ஏனெனில் நான் அந்தப்பள்ளியின் முன்னாள் மாணவி. ஆங்கில மீடியத்துக்குப் பாடம் எடுத்ததாக அவர் கூறினாலும் எனக்கென்னவோ எங்கள் தமிழ் மீடியத்துக்கும் வந்ததாகவே தோன்றிக் கொண்டிருக்கிறது.

பள்ளி மற்றும் கல்லூரிக்கால பழைய நினைவுகளை வெகுநேரம் அசை போட்டபின் அவரிடம் பொன்விழா மலரையும் ஆசிகளையும் பெற்றுக்கொண்டு விடை பெற்றோம். இத்தனை வருடம் கழித்து பழைய ஸ்டூடண்டை குடும்பத்துடன் சந்தித்ததில் சாருக்கும் ரொம்ப மகிழ்ச்சி. படைப்பாளியின் போட்டோ போடப்படாவிட்டால் என்ன? என் கல்லூரியின் பொன்விழா மலரில் என் பெயருடன் படைப்பும் இடம் பெற்றிருக்கிறதே.. எனக்கு அது போதும்.

கல்லூரியை விட்டு வெளியே வந்த இத்தனை வருடங்களுக்குப் பிறகு, எனக்கு இந்தச் சந்தர்ப்பம் கிடக்குமென்றோ என் ஆசிரியர்களைச் சந்திப்பேனென்றோ நான் கனவிலும் நினைக்கவில்லை. மைக்கை மானசீகமாக நீட்டி, "இப்பொழுது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?" என்றாள் மகள்.

"மனம் நிறைந்திருக்கிறது" என்றேன்.

Friday, 7 July 2017

சின்னஞ்சிறு மனிதர்கள்.

எத்தனை வயதானாலும் சரி, மனிதன் எப்போதும் தன் நினைவுக்கிடங்கில் பொக்கிஷமாய்ப் பாதுகாத்து வருவது அவனது குழந்தைப்பருவ நினைவுகளாய்த்தானிருக்கும். வளர்ந்தபின் தூக்கம் தொலைத்த இரவுகளில் கள்ளங்கபடமற்ற, சுமைகளற்ற அந்தப் பருவத்தை நினைத்துப் பார்ப்பதும், இயல்பே. "குழந்தையாவே இருந்துருந்தா எவ்ளோ நல்லாருந்துருக்கும்" என்ற பெருமூச்சினூடே நம்முடைய ஏக்கங்களையும் வெளியிட்டுக்கொள்கிறோம்.

உண்மையில் குழந்தைகளிடமும் அந்தந்த வயதுக்குரிய கவலைகளும் ஏக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன.  விளையாட்டில் சேர்த்துக்கொள்ளவில்லை, பொம்மையைப் பிடுங்கிக்கொண்டு விட்டாள்(ன்), அப்பா அம்மா குட்டிப்பாப்பாவையே அதிகம் கவனிக்கிறார்கள், நிலாவில் வடை சுடும் பாட்டிக்கு பருப்பு, எண்ணெய் எல்லாம் யார் கொண்டு போய் கொடுப்பார்கள், அப்பா வாங்கி வந்த இனிப்பில் தம்பிக்கு, தங்கைக்கு  ஒரு விள்ளல் அதிகம் கிடைத்து விட்டது என்று எத்தனையோ உலகமகாக்கவலைகளால் நாமும்தானே பாதிக்கப்பட்டிருந்தோம். நெல்லிக்காய் கொடுத்து நாம் தாஜா செய்து வைத்திருந்த ஃப்ரெண்டை, கலர் சாக்பீஸ் கொடுத்து தட்டிக்கொண்டு போன எதிரியை நினைத்து எத்தனை நாள் கறுவியிருப்போம். வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது பிறரறியாமல் நம்மை நறுக்கென்று கிள்ளி வைத்த எதிரியை, இமை தாண்டா நம் கண்ணீர் கண்டு பதறி, சமயம் பார்த்து தலையில் குட்டி பழி வாங்கிய நம் தோழமையை "மை ஃப்ரெண்டு" என்று தோள் சேர்த்து அணைத்திருப்போம். இப்படி நாளொரு கவலை, பொழுதொரு வருத்தம் என்று இருந்திருந்தாலும் நம் எனிமீஸ்களை பெரீய்ய்ய்ய்ய்ய்ய மனசுடன் மன்னித்து விடும் பெருந்தன்மையும் நமக்கிருந்தது. அதே பெரீய்ய்ய்ய்ய்ய்ய மனசு நம் எதிரிகளுக்கும் இருந்தது என்பது வேறு விஷயம்.

ஆனால் இன்றைய குழந்தைகளின் நிலையே வேறு. எதற்கெடுத்தாலும் டென்ஷன் டென்ஷன் என்று குழந்தைப்பருவம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்கிறார்கள்.. அவர்களிடம் பேசிப்பாருங்கள். அவர்களை அலைக்கழிக்கும் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகளைப் பட்டியலிட்டு விடுவார்கள். இந்தச் சின்னஞ்சிறு மனிதனுக்கு இத்தனை பெரிய கவலையா என்று சிரிப்பாகத்தானிருக்கும். ஆனால் அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால்தான் அவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் புரியும். காலை எழுந்தவுடன் படிப்பு,.. பின்பும் படிப்பு, மேலும் படிப்பு என்றே நாளைக்கழிக்க வேண்டியிருக்கிறது. இதை விட்டால் இருக்கவே இருக்கிறது விளையாட்டு. விளையாட்டு என்றவுடன் மைதானத்திலும் தெருவிலும் ஓடியாடி விளையாடுவார்கள் என்று எண்ணிக்கொண்டால் நீங்கள் அந்தக்காலத்து ஆள் என்று அர்த்தம். இருந்த இடத்தை விட்டு இம்மி கூட அசையாமல் கம்ப்யூட்டரில் விளையாடுவார்கள் என்று பதில் சொன்னால் உங்களுக்கு ஒரு சபாஷ் கொடுத்துக்கொள்ளுங்கள்.

மதிப்பெண் போட்டியைப் பற்றிச் சொல்லவேண்டியதேயில்லை. போட்டி நிறைந்த இந்த உலகத்தில் எதிர் நீச்சல் போட்டுப்போட்டு இந்தப்பிஞ்சு உள்ளங்கள் களைத்துத்தான் விடுகின்றன. இப்பொழுதெல்லாம் கோடை விடுமுறைகளையும் விட்டு வைப்பதில்லை. கராத்தே, நீச்சல், டான்ஸ் , ஓவியம், கிரிக்கெட், மியூசிக் என்று ஆயிரத்தெட்டு வகுப்புகளில் குழந்தைகளைச் சேர்த்து விட்டு விடுகிறார்கள்.  அதையாவது முறைப்படி முழுப்பயிற்சி கொடுக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. குறுகிய காலப்பயிற்சி என்ற பெயரில் வெறும் இரண்டு மாதம், மூன்று மாதம் போய்வந்து கற்றுக்கொள்ளும் ஓவியம் அல்லது நடனத்தில் என்ன முழுமை இருக்க முடியும்? இசைக்கருவிகளை மீட்ட முழுவதுமாக அறிந்து கொள்ளுமுன் பயிற்சிக்காலம் முடிந்து விடும்.

வாங்கிய காசுக்கு வஞ்சனையில்லாமல் கற்றுக்கொடுக்கப்பட்ட அந்த ஒரே ஒரு பாடலை அக்குழந்தை வருடமுழுவதும் விருந்தினர் முன் அரங்கேற்றும் பாவம். ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொட்டி கற்றுக்கொள்ள வைத்த அக்குழலும் பியானோவும் நிச்சயமாக பெற்றோருக்கு இனிமைதான். வரும் விருந்தினர்தான் பாவம். பூனை முனகும் ஒலியைக்கூட ஆஹோ ஓஹோவென்று ரசிக்கும் பாவனையில் முகத்தை வைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அப்படியொரு கொடுமைக்கு ஆட்பட்ட அவர் மேலும் சில மாதங்களுக்காவது அப்பக்கம் எட்டிப்பார்க்கத் துணியாரென்பது திண்ணம். இத்தோடு நின்று விடுவதில்லை.. வருடம் முழுக்க கல்விக்கூடங்களுக்குப் போய் வந்த குழந்தைகள் விடுமுறையில் மேல் வகுப்புகளுக்கான  பயிற்சி வகுப்புகளுக்குப் போகிறார்கள். அங்கேயும் ஹோம் வொர்க் போன்றவை உண்டாம். என் தோழியின் பையன் சொன்னபோது "அடப்பாவமே.." என்றிருந்தது. வளரும் வயதில் குழந்தைகள் எதையும் சீக்கிரம் கிரகித்துக்கொள்வார்கள், இது கற்றுக்கொள்ளும் வயது என்பதெல்லாம் சரிதான். அதற்காக இப்படியா?!!!!!  முன்பெல்லாம் விடுமுறை வந்தால் குழந்தைகள் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். இரண்டு மாதங்கள் அங்கு தங்கி, மற்ற உறவினர்களின் பிள்ளைகளோடு லூட்டியடித்து, பொழியும் வெயிலையெல்லாம் தாங்கள் வாங்கி உடல் கறுத்து வந்தாலும், ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல், உறவு பேணுதல், பெரியோரை மதித்தல் என நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொண்டு வந்தார்கள். இப்பொழுதோ,. அந்த நல்ல பழக்கங்களெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாய்தான் காணக்கிடைக்கின்றன.  

குழந்தைகளுக்குக் கதை சொல்லுதலைப் பற்றி நாம் யோசித்தே ஆக வேண்டும். அப்பொழுதெல்லாம் கதை நேரமாக சாப்பாட்டு நேரம் இருந்தது. பாட்டியின் கதையோடு இரண்டு கவளம் சாதம் கூடுதலாக உள்ளே இறங்கும். இல்லையென்றால் தாத்தா பாட்டியின் மேல் கால், கைகளைப் போட்டுக்கொண்டு 'உம்' கொட்டிக்கொண்டு குழந்தைகள் கதை கேட்டுக்கொண்டு விழித்திருக்க, கதை சொன்ன தாத்தா பாட்டிகள் தூங்கி விடும் இரவுகளும் உண்டு. சில சமயங்களில் குழந்தைகளையே கதை சொல்லவும் தூண்டும்பொழுது அவர்களும் நன்றாகக் கதை விடுவார்கள் :-)) இது குழந்தைகளின் கற்பனாசக்தியை வளர்ப்பதாகவும் இருந்தது. அப்பொழுதெல்லாம் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளும் நடக்கும். அதிலும் கூட குழந்தைகளை நல்ல நீதிக்கதைகளைச் சொல்லச்சொல்வது வழக்கம். இதனால் மேடைக்கூச்சமில்லாமல் பத்துப்பேருக்கு முன்னால் பேசவும், தன் கருத்துகளைத் தயங்காமல் எடுத்துரைக்கவும் பயின்றார்கள். பிள்ளைகளும் வளரும்போதே நல்ல பழக்கங்களுடன் வளர்ந்தார்கள். இந்த நீதிபோதனை வகுப்புகளின் அருமையை உணர்ந்ததால்தான் பள்ளிகளில் மறுபடியும் நீதிபோதனை வகுப்புகளைக் கொண்டு வரவேண்டும் என்ற கோஷம் வலுப்பெற ஆரம்பித்துள்ளது. நல்லது கெட்டது சொல்லித்தர, சரியான முறையில் வழி நடத்த ஆளில்லாத நிலையில் நாடு இருக்கும் இன்றைய காலகட்டத்தில் வளரும் இளம்பிள்ளைகளுக்கு அத்தகைய வகுப்புகள் அவசியமும் கூட.
வால்: நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியின் பொன்விழா ஆண்டு மலரில் இடம் பெற்றது.

LinkWithin

Related Posts with Thumbnails